நான் பார்க்கும் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பேறுக்குப் பிறகு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அல்லது அவர்கள் சார்ந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்குப் போகவேண்டாம் என்று வற்புறுத்தி அவர்களை போக விடுவதில்லை. இந்த இரண்டு காரணங்களையும் என் விஷயத்தில் நடக்காமல் பார்த்துக் கொண்டேன். எப்போதும் நான் வேலைக்குப் போவேன் என்று திருமணத்திற்கு முன்பே என் வீட்டாரிடம் உறுதியாக சொல்லியிருந்தேன். அதன்படி திருமணமாகி, கர்ப்பம் தரித்திருந்த ஒன்பது மாதங்கள் வரை வேலைக்குச் சென்றேன். வேலையிலிருந்து விலகிய ஒரு வாரத்தில் எனக்கு பிரசவமானது. குழந்தை பேற்றுக்கு பிறகு, 3 மாதங்கள் வரை விடுப்பு கேட்டிருந்தேன். இன்னும் சிறிது காலம் குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டிய தேவை இருந்தது. விடுப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க கேட்டேன். அலுவலகத்தில் ஒத்துழைத்தார்கள்.
குழந்தைக்கு அருகில் இருந்த 5வது மாதத்தில் குழந்தைக்கு மாற்று உணவுக்கு பழக்கினேன். குழந்தையும் ஒத்துழைத்தான். அருகருகிலேயே உறவுகள் அமைந்துவிட்டதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடும் தேவை ஏற்படவில்லை. அவர்களே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்துக்கொண்டார். குழந்தையை விட்டு வேலைக்குப் போகிறோமே என்கிற செயற்கையாக உருவாக்கப்பட்ட குற்ற உணர்ச்சி எல்லாம் எனக்கு உண்டாகவில்லை. எனக்கென்றும் என் குடும்பத்திற்கென்றும் நான் வேலைக்குப் போகும் தேவையிருந்தது. இதில் குற்றவுணர்ச்சி கொள்ள ஏதும். இந்த குற்றவுணர்ச்சி பற்றி ஏராளமான பெண்கள் என்னிடம் கேட்டதுண்டு. அப்படி எதுவும் இல்லை, என் குழந்தை நான் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு விஷயங்களை கற்றுக்கொண்டிருக்க மாட்டான். அவன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உன்னிப்பாக பார்க்கிறான், அதிலிருந்து அவன் யாரும் சொல்லிக்கொடுக்காமலே கற்கிறான் என்று அவர்களிடம் பேசுவேன். அது அவர்களுக்கு உகந்த பதில் அல்ல, அவர்கள் எதிர்பார்ப்பது என் செய்வது என் தலை எழுத்து என்கிற புலம்பலைத்தான்.
உறவுகள் இருந்தார்கள் அதனால் அவர்களிடம் குழந்தையை விட்டுப்போவதில்லை என்ன பிரச்னை இருக்கப்போகிறது எனக்கேட்கலாம். சிலதை சொல்லிவிடுகிறேன். காலையில் நானும் கணவரும் அலுவலகம் கிளம்புவதற்கு முன் குழந்தைக்கு நாள்முழுக்கத் தேவைப்படும் உணவு, இயற்கை உபாதைகளை கழிக்க வைத்து குளிப்பாட்டுவது என எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவோம். குழந்தை பராமரிப்பு நிலையங்களில் எப்படி எல்லா தயாரிப்புகளோடு கொண்டுபோய் விடுவோம் அப்படித்தான் எல்லாமும் நடக்கும். உறவுக்கு தனிப்பட்ட வேலைகள் இருக்கும், அவர்களை எதிர்பார்ப்பது நியாமற்றது. குழந்தையை பார்த்துக்கொள்வதே பெரிய உதவிதானே. ஆகவே, குழந்தை பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் சிக்கல் இங்கேயும் இருப்பது இயற்கையானதே. குழந்தைக்கு காய்ச்சல் என்றால் நாம்தான் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்பது அவ்வப்போது வருவது இயல்பானதே. ஆனால் நம் உறவுகளும் சில சமயம் நம்முடன் வேலை பார்ப்பவர்களும் ஏற்படுத்தும் பீதி, அவஸ்தையான ஒன்று.
நன்றி - http://mvnandhini.com/
No comments:
Post a Comment