Saturday 23 August 2014

ஆகஸ்டு என்றால் போராட்டக் களங்கள் - மயிலாடன்

ஆகஸ்டு : 

ஆகஸ்டு என்றால் இந்திய நாடு சுதந்திர நாளை பற்றி பேசுவார்கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆகஸ்டு என்றால் போராட்டக் களங்கள் காணும் திங்கள் ஆகும்.

1938 ஆகஸ்டு முதல் தேதி (இந்நாள்) தமிழ் நாட்டின் வரலாற்றில் மொழி மானம் இனமானம் கூர் தீட்டப்பட்ட நாள்!

திரு. ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக (Premier) இருந்த நிலையில் சென்னை மாநிலப் பள்ளிகளில் இந்தியைக் கொண்டு வரப்போகிறேன் என்று முதலில் அறிவித்ததும்கூட இந்த ஆகஸ்டில்தான் (இராமகிருஷ்ண மடத்தில் 10.8.1937).

6,7,8 ஆம் வகுப்புகளில் இந்தியைக் கொண்டு வந்தார் பிரதமர் ராஜாஜி; 1938 - 1939 நிதி நிலை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு தகவல்: இந்துஸ்தானி கற்பிக்க 125 நடுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியானது (இதன்படி வெளியான அரசு ஆணை நாள் 21.4.1938) இந்தி ஆசிரியர்களுக்காக ரூ.20 ஆயிரமும் ஒதுக்கீடு செய் யப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது: தொடக்கக் கட்டத்திலேயே நீதிக் கட்சி உறுப்பினரான ராஜா சர். எம்.ஏ. முத்தையா (செட்டியார்) எதிர்த்தார்.

அதற்குப் பதில் அளித்த ராஜாஜி இந்தியை எதிர்ப்பவர்கள் இரு வகை யினர் (1) ஆரிய எதிர்ப்பின் விளைவாக ஒரு சார்பாக இருந்து எதிர்ப்பவர்கள் 2) காங்கிரஸ் மீதுள்ள வெறுப்பால் எதிர்ப்பவர்கள் என்று குறிப்பிட்டார்.

ராஜாஜியின் இந்த முடிவை எதிர்த்துத்தான் தமிழ் மண் போர்க்கோலம் கொண்டது. பல வடிவங் களில் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. அதில் ஒன்றுதான் ஆகஸ்டு முதல் தேதி (1938) தமிழர் பெரும் படை திருச்சி -உறையூரிலிருந்து புறப்பட்டதாகும். (100 பேர்கள்)
படைத் தலைவர் அய். குமாரசாமி பிள்ளை. தளபதி - அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, பெருஞ்சோற்றுத் தலைவி- மூவ லூர் இராமாமிர்தம்
அம்மையார்; கடந்து வந்த ஊர்கள் 234. கடந்து வந்த தொலைவு 577 மைல்கள். சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாள் 11.9.1938.

படையை வரவேற்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழர்க்கே! என்ற முழக்கத்தை முதன் முதலாகத் தந்தைபெரியார் கொடுத் தார்.

கட்டாய இந்தியை எதிர்த்து பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் செகதீசன் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் மேடைக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டார்.

இதே ஆகஸ்டு 1952, 1953, 1954 ஆண்டுகளில் தான் இரயில்வே நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்து நடத்திக் காட்டினார்.

அந்த ஆகஸ்டுப் பட்டியலில் இன்று (1.8.2014) சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் அறிவித்த இந்தப் போராட் டத்தையும் இணைத்துக் கொள்க!

- மயிலாடன்

No comments:

Post a Comment