Saturday 4 October 2014

நாத்திகம் பேசுறவங்க இஸ்லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ?



நாத்திகம் பேசுறவங்க இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை?

ஐரோப்பாவில் எழுதப்படுகிற பகுத்தறிவு நூல்களாகட்டும் இதர நூல்களாகட்டும் அவை இந்து மதத்தைத் தொடுவதில்லை. இங்கர்சால் எழுதிய நூல்களைப் பாருங்கள் கிறித்துவ மதமே விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும். சமீபத்தில் இணையத்தில் உலாவந்த போது அகப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் அந்தந்த
நாட்டில் பெரும்பான்மையோரின் மத நம்பிக்கை சார்ந்தே கேள்வி எழுப்பியுள்ளன.


இதுவே இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள நிலை. வலைத் தளத் தில் தேடினால் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நாத்திகர் படையைக் காணலாம். பெரும்பாலும் அங்கெல்லாம் இந்து புராணங்கள் சார்ந்து அல்ல அந்தந்த நாட்டின் புராணங்களே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதைக் காணலாம். அவர்கள் பட்டியல் தருவதானால் ஏராளம் பக்கங்கள் தேவை.

போய்த் தேடுங்கள் உண்மை அறியலாம். இங்கேயும் டாக்டர் கோவூர் எழுதிய நூல்களில் கிறித்துவ மதம் சார்ந்த நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் காரணம் அவர் கிறித்துவச் சூழலில் பிறந்தவர். பெரியார் பெரிதும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை கேள்விக் குள்ளாக்கினார். அவர் பிறந்த சூழல் அப்படி அதே சமயம் இங்கர்சாலின் நான் ஏன் கிறித்துவனல்ல என்ற நூலையும் மாவீரன் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன்?, நூலையும் மொழிபெயர்த்து அச்சிடச்செய்தவர் அவரே.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எல்லா மதத்தினரின் மூடநம்பிக்கை களையும் கேள்விக்குள்ளாக்கினார். ஒருவர் அவர் பிறந்த மதச்சூழல் பிறப்பால் அவர் மீது திணிக்கப்பட்ட மதம் இவற்றையே நன்கு அறிவார் ; எனவே அது சார்ந்து பேசுவதே இயல்பு. மாறாக பிற மதத்தை விமர்சிக்கப்புகின் தேவையற்ற மதமோதலுக்கு வழி கோலிவிடக் கூடுமல்லவா?

- சு.பொ.அகத்தியலிங்கம்
(நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் 14.09.2014)

No comments:

Post a Comment