‘அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று
பிடிவாதம் செய்வது அறியாமை தான். அது தமிழ்ப் பண்பு கூட அல்ல. தமிழில் -அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்கள் இல்லை’அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி
என்பதைக் கூட அழகாக ஆனால் ஆழமாக மறுக்கிறார் பெரியார்.
‘இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம்
செய்வதும் அறியாமைதான். ஏன்? நம்
தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன் வீட்டிலோ
விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன்
காரணமாக, நம்மைப்
பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா? ’ என்று தாய்மொழி என்ற கருத்துருவையே
கேள்விக்குள்ளாக்கும் பெரியார், நம் தாய் குழந்தையாக இருந்த போது பேசியதென்ன? பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது
நாம் பாச்சி, சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள்
பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும்
அறியாமை என்று தோன்றவில்லையா?’ என்று விளக்குவதையும் தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
‘தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த
பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்? அதன் பிறகுதானே சிறிது சச்சரவு
நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ‘ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம்
செய்தாயிற்றே! உன்னை உன் புருசனுக்குக் கொடுத்துவிட்டோம். தானம் செய்து விட்டோமே!
இனி, உனக்கு
இடம் அவன் இருப்பிடம் தானம்மா’ என்று கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகா தானம் என்பதற்குத்
தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை’ என்றுதானே கூறுகிறார். அதாவது
புருசனும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள். ‘மோட்சம்’என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர்
காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம்
என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி? நெறி, கோள் என்றால்- வெறி ஏது? ‘பதிவிரதாத தன்மை’ என்பதற்காவது தமிழில்
வார்த்தையுண்டா? ‘பதிவிரதம்
’
என்ற வார்த்தை இருந்தால்
- 'சதி விரதம்’ அல்லது ‘மனைவி விரதம் ’ என்கின்ற வார்த்தையும்
இருக்கவேண்டுமே! இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற
வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்து விட்டன? தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள்
யாவும் பெரிதும் ஆண், பெண்
இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு என்ற அடிப்படையின்
மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும்
கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும்.
வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு
மாறுபட்டவை.
‘மூட நம்பிக்கை மொழி என்று ஒன்று
இல்லை’ என்று
கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த
வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர் மேலே பெரியார்
கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆங்கில மொழியை விரும்புவதற்கு பல
காரணங்களை பெரியார் அடுக்குகிறார், ‘வடமொழித்தொடர்பால் ஏற்பட்ட இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன.
அதற்கு மாறாக ஆங்கில மொழித் தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும் அம்
மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள். ஆங்கில மொழி நூல்களில்
முன்னேற்றக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள்
ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘அடிமை வாழ்வே ஆனந்தம் ’ என்று நினைத்திருந்த இவ் இந்திய
நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று
கூறினால் மிகையாகாது. இராஜா வேண்டாம். குடியரசு தான் வேண்டும் என்கிற அறிவு.
சமதர்மம் வேண்டும், சனாதனம்
ஒழிய வேண்டும் என்கின்ற அறிவு ஆணும் பெண்ணும் சமம் என்கிற அறிவு ஆகிய சகல அரசியல்
பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துக்களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது ’ .
‘தந்தியையும், மின்சாரத்தையும், படக்காட்சியையும், ஆகாய விமானத்தை யும் ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான்
அறிமுகப்படுத்தியதே யாழிய, நமது
தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்க வந்த வடமொழியோ அல்ல’.
வீட்டு வேலைக்காரியிடம்
ஆங்கிலத்தில் பேசுங்கள். குழந்தைக்கு தாய்பாலில் ஆங்கிலத்தை கலந்து கொடுங்கள்
என்று பெரியார் சொல்லியதற்கு அடிப்படை காரணம் இவை தான் என்பது நன்றாகவே தெரிகிறது.
ஆனால் பெ.மணியரசன் போன்றவர்கள் பெரியாரைப் படிப்பதுமில்லை. படிக்க முயற்சிப்பதுமில்லை.
மேலும் பெரியார் கூறுகிறார், ‘அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும்
சுற்றுச் சார்பு தான் காரணம். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை
இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்து பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்த
மகன் இந்தியாவில் வளர்ந்த மகனை விடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனா
யிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன்
எதையும் மதக் கண் கொண்டு பார்ப்பான் ’. பெரியார் இப்படி ஒப்பிட்டுக்
கூறுவதையும் அவர் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.
தமிழ் ஒரு காலத்தில் சிறந்த மொழியாக
இருந்தது என்று கூறும் பெரியார் அது சீரழிந்து போனதற்கு காரணம் மதம் அதில்
புகுந்ததுதான் என்று கூறுகிறார்.
‘தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த
மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல்
பிற்படுத்தப்பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி
சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால்
நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து
வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில்
இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக்கத்தக்கது’.
பெரியாரை தமிழ் அறிஞர்களும் தமிழ்த்
தேசிய வாதிகளும் கடும் விமர்சனம் செய்வதற்கு காரணம் அவர்கள் பெரியாரால் பலமாக
தாக்கப்பட்டதுதான் . தமிழறிஞர்களைப் பற்றி பெரியாரின் பார்வை இதுதான்,
‘தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை
போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள்
பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு ‘கவைக் குதவாத ’ கட்டுக் கதைகளை நம்
குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை
விட்டு-திருவாசக அறிவையும் பாரத - இராமாயண அறிவையும் பரப்பிவிட்டனர். சிந்திக்கத்
தவறினார்கள். சிலப்பதிகாரத்தை தலை சிறந்த நூலென்று இன்னமும் போற்றி வருகிறார்கள்.
அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக்
கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக் காட்டு. அந்த சமயத்திலும் அவள்
நெருப்புக்கு ஆணையிடுகிறாள், பார்ப்பனரை
அழிக்காதே என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரிய பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்கள சிந்தித்துப் பாருங்கள்’.
இன்னுமும் பெரியார் தமிழ் கீழ்
நிலையை அடைந்ததற்கு மிகவும் வேதனையடைகிறார்,
‘தமிழில் ஆரீயம் புகுந்ததால்தான், மற்ற மக்களல்லாம்
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடாத்திய தமிழர் மரபில்-
இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு
மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப்
புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்’.
மொழி என்பதை பற்றிய மற்றொரு கருத்தை
இங்கு பெரியார் வெளியிடுகிறார். இதையயல்லாம் தமிழிறிஞர்கள் உணர வேண்டும்,
‘மொழி என்பது உலகப் போட்டிப்
போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட
வேண்டும். அவ்வப்போது கண்டு பிடித்துக் கைக்கொள்ள வேண்டும். நம் பண்டிதர்கள் இந்த
இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் சிவனும்
சுப்பிரமணியனும் பேசிய மொழி. உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
அதே சிவனும் சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு
பயன்படுமா? இயற்கையின்
தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும்
வசதியளிக்கக் கூடியதேயாகும்’.
தமிழைவிட தமிழறிஞர்களைத்தான்
பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக்
கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர்.
இதற்கும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய
பெரியாரை பார்ப்பனர்கள் சாமார்த்தியமாக மத நம்பிக்கையில் கை வைக்கிறார் என்று திசை
திருப்பியதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நாம் உணரலாம்.
தமிழைப் பற்றி கூறும் போது, ‘தமிழைப் பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு
என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனும் அல்ல.
தமிழுக்காக எவ்வித தொண்டும் புரிந்தவனும் அல்ல’ என்றும் அடக்கமாகக் கூறுகிறார்.
‘மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத்
தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட
மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது ’.
‘உதாரணமாக, மக்கள் தேவர் நரகர் உயர்திணை
என்றால் என்ன? நரகர்கள்
யார்? தேவர்கள்
யார்? இலக்கணத்திலேயே
மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக
ஞானத்தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாய் இருக்கின்றன ’. (குடி அரசு 26.1.1936).
தேசிய இனம் என்பது பற்றியும்
பெரியார் கூறுகிறார். கேளுங்கள், ‘தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தனித்தனி மொழியா? இந்தப்படி மொழி பேசுகிறவர்கள்
தனித்தனித் தேசிய இனமா? இதற்காக
அவர்கள் பிரிந்து வாழ வேண்டுமா? ’ என்றெல்லாம் கேட்கிறார்.
தமிழ்ப்புலவர்களைப் பற்றி இன்னமும்
கூறுகிறார் பெரியார், ‘நான்
தமிழை அறியாதவனல்ல. தமிழ்ப்புலவர்களை மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல. தமிழ்
இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல ’.
‘இன்றையப் புலவர்கள் தமிழ்
அபிமானிகள் தியரிடிகல் புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் தமிழ் அறிவு
உடையவன் என்று கருதி இருப்பவன். 1920 வரை என்னிடம் வந்து வாதம் செய்யாத, கை நீட்டாத தமிழ்ப் புலவர்கள்
குறைவென்றே சொல்லுவேன் ’.
‘மீனாட்சி சுந்தரம் பிள்ளையை எனக்குத்
தெரியாது. சாமிநாத அய்யரை எனக்கு நன்றாய்த் தெரியும். சாமி வேதாச்சலத்தையும்
தெரியும். கலியாண சுந்தர முதலியார் தரத்திலுள்ள பிரபல தமிழ்த் தென்றல்களையும்
தெரியும் ’.
‘ஒரு சமயத்தில் நாங்கள் காங்கயம்
சேஷாசல நாயுடு, முத்துசாமிக்
கவிராயர் (சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆனபின்) சங்கரதாஸ் இவர்களுடன் பேசிக் கொண்டு
இருந்த போது, வள்ளுவரை
மன்னிக் கலாம். மற்ற எந்த புலவனையும், எந்த இலக்கியத்தையும் மன்னிக்க
முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை வரையில்
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள் என்று சொன்னேன். அவர்கள் பெரும் சிரிப்பு
சிரித்து கை தட்டினார்கள். இது சுமார் 1900 முதல் 1920 வரை உள்ள காலத்தில் நடந்த பல
நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் ’.
‘சுமார் 50. 60 வருடங்களுக்கு முன்பெல்லாம்
புலவர்கள் யாராயிருந்தாலும் பிச்சை எடுத்தே தீருவார்கள். பெரிய புலவர்களுக்கு
எல்லாம் மாதம் ரூ 15 முதல்
ரூ 30 வரை
சம்பளம்தான் சாதாரணமாக இருக்கும். அவர்கள் தகுதி எல்லாம் இலக்கியங்களை உருப்போட்டு
ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லி, மக்களை மருளச் செய்து, காசு வாங்குவதுதான் உயர்ந்த
தொழிலாகும். புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன்.
நா.கதிரைவேற்பிள்ளை என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப்
பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று
சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு
வாந்தி எடுத்து விட்டார் ’.
இப்படி கூறிய பெரியார் இன்னும் ஒரு
படி மேலே போகிறார், ‘ இது
வரை நாட்டுக்கு, மனித
சமுதாயத்திற்கு இந்த நாட்டில் எந்தப் புலவனாலும் வளர்ச்சி, அபிவிருத்தி காரியமும் ஆனது
கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இன்று இங்கு யாரும் இல்லை. எந்த புலவனாலும்
இதுவரை நமது நாட்டுக்கு சிறு மதிப்பிற்குரிய முன்னேற்ற நூல் கூட
உண்டாக்கப்பட்டதில்லையே! கம்ப ராமாயணத்திற்கும் பெரிய புராணத்திற்கும் புதிய
பொருள் எழுதிப் பணம் சம்பாதிப்பார்கள் ’.
‘இன்று தமிழில் மேதாவிகள் டாக்டர்கள்
ஏராளமாக ஆகி விட்டார்கள். பூச்சும் பொட்டும் நாமமும்தான். அவர்கள் தலையில் இருக்க
வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு
எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள்’.
‘எவனைப் பக்குவப்படுத்தினாலும்
மரியாதை, விளம்பரம்
வந்தவுடன் தமிழைக் காக்க அல்லவா புறப்பட்டுவிடுகிறார்கள். புலவன் பொறுக்கித் தின்ன
இலக்கியங்களைக் காப்பதுபோல் பொது தொண்டு மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப்
பயன்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் தமிழைக் காக்கிறேன் என்கிறார்கள். என்னைக்
குடிகாரர் போல் வைவதில் சமாதானம் ஏற்பட்டு விடாது. கையிலுள்ள சரக்கைக் காட்ட
வேண்டும் ’.
‘ அட கெடுவாய் பல தொழிலுமிருக்கக்
கல்வி (தமிழ்)
அதிகமென்றே கற்றுவிட்டோம். அறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக் கழைக் கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத்
தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச்
சனியான தமிழைவிட்டு தையலார் தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை
என்ன சென்ம மெடுத்து உலகிலிரக்கின்றோமே "
அதிகமென்றே கற்றுவிட்டோம். அறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக் கழைக் கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத்
தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச்
சனியான தமிழைவிட்டு தையலார் தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை
என்ன சென்ம மெடுத்து உலகிலிரக்கின்றோமே "
‘தமிழ் படித்தால் பிச்சை கூட
கிடைக்கவில்லை. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர்வாழ ஒன்றுக்கும்
பயன்படவில்லை என்பதோடு இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறுதுறையில் செலவிட்டால்
வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ்க்
கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்திக்காட்டியிருக்கிறார் ’. (விடுதலை தலையங்கம் 16.3.1967)
பெரியார் மொழிக் கொள்கை
வகுக்கவில்லை என்று கூறுகிறார் பெ.மணியரசன். மொழிக் கொள்கை என்றால் தனி நாடு
பெற்றால் நாட்டில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற
மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆகும். இது தொடர்பாக இங்கு
பெரியார் கூறி பதிவு செய்துள்ளதை அவர் கூர்ந்து கவனிக்க வேண்டும்,
‘ தமிழ் நாட்டில் இருந்து
கொண்டு-தமிழ்நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற்கானாலும்
போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி
என்பதாகத்தான் தோன்றும். ஆனால் நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும் ஆட்சி
தமிழர்களல்லாத -அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அன்னியர்கள் பல நாடுகளை
ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப்பிற்கும்
வசதிக்கும் ஏற்றபடி ஏதோதோ காரணங்களை சொல்லிக் கொண்டு அன்னிய மொழியாகிய இந்தி மொழி
என்பதுதான் ஆட்சி மொழியாகவும் கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய
மொழியாகவும் கூட இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும்படியான
நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டு விட்டது ’.
ஆங்கிலம் ஏன் என்பதற்கு பெரியார், ‘தமிழ், வடமொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது
என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய
நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் - ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும்
ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும் ஆங்கில எழுத்துக்கள தமிழ்
நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும் ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம்
பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் ’ என்று விளக்கினார். ( ‘ மொழியும் அறிவும் ’ 1957,
1962).
1957 மற்றும் 1962 இல் பெரியார் கூறியதன் அடிப்படையில்தான்
இன்று தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி பயில அனுப்புவதற்கு
காரணமாக உள்ளது. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் ஏற்பட்ட பின்னர்தான் சேரி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின்
குழந்தைகள் கழுத்தில் ‘டை’ கட்டிக் கொண்டு கிழிசல் இல்லாத ‘ டவுசருடன் ’ பள்ளிக்குச் செல்லும் அழகைப்
பார்க்கிறோம்.
ஆரம்பக் காலங்களில் பாலிடெக்னிக்
என்பது பார்ப்பனக் குழந்தைகளுக்கு என்றும் ஐ.டி.ஐ என்பது பிற சாதியினருக்கு என்று
இருந்ததையும் மாற்றி சேரி மக்கள் குழந்தைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள்
குழந்தைகளும் பாலிடெக்னிக் படிக்க முடிகிறது எதனால் என்பதையும் உணர வேண்டும்.
இன்று பெருமளவில் இன்ஜினியரிங்
கல்லூரி வந்து அனைத்து வகுப்பினரும் இன்ஜினியரிங் படிப்பதால் ஏற்கனவே
பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இப்படிப்பு இப்போது எல்லா
சாதியினருக்கும் பொதுவுடமை ஆக்கப்பட்டு விட்டதே. இதற்கும் பெரியாரின் தொலைநோக்கு
உணர்வுதானே காரணம்.
தமிழ் வழிக் கல்வியை
விரும்புகிறவர்கள் இன்றுவரை அதற்கான எந்த ஒரு சிறு முயற்சியையும் எடுக்கவில்லை.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில்
மருத்துவர் டொமினிக் சுவாமிநாதன் அவர்களைக் கொண்டு தமிழில் மருத்துவம் படிப்பதற்கான
குழு அமைக்கப்பட்டது. அவரும் அதற்கான வரைவுகளைத் தயார் செய்தார். அதை கணினியில்
ஓரு வாரம் உடனிருந்து இரவில் அச்சிட்டுக் கொடுத்தவன் நான். ஆனால் தமிழறிஞர்கள்
அவரையோ அவரின் செயல்பாட்டையோ கண்டு கொள்ளவே இல்லை. திரு. டொமினிக் சுவாமிநாதன்
அவர்களுக்கு இருந்த தமிழ் ஆர்வத்தை அக்கறையை நான் நேரில் பார்த்தவன்.
இப்போது திருவாரூரில் மருத்துவர்
ஜெயசேகர் அவர்கள் இருக்கிறார்கள். எம்.டி. பட்டபடிப்புக்கான தேர்வை தமிழில்
எழுதினார்கள். அவர்களுடைய தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்
இன்றுவரை போராடி வருகிறார். எந்த தமிழ் அமைப்புகளும் அவருக்கு எந்த ஆதரவும்
தந்ததில்லை.
ஆனால் அவரோ அதைப்பற்றியயல்லாம்
கவலைப்படாமல் தமிழில் படிப்பதற்காக ஆங்கிலத்திலிருந்து அவரே மொழிபெயர்த்த எம்.டி.
படிப்பிற்கான அனைத்து தமிழ்ப் பாடங்களையும் அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டு
வருகிறார். அந்த பாட நூல்கள் அனைத்தும் மருத்துவத் துறைக்கு கருவூலங்கள்.
மருத்துவத்திற்கு தமிழில் நூல்கள் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது என்ற
அளவிலான நூல்கள். இக்கருத்தை நான் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களிடம் மருத்துவர்
ஜெயசேகர் அவர்களை வைத்துக் கொண்டே கூறினேன். கு.அரசேந்திரன் அவர்களும் மகிழ்ந்து
ஒவ்வொரு நூலின் ஒரு படியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இவையயல்லாம் நான்
கூற காரணம், மருத்துவர்
ஜெயசேகர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட தமிழ் அமைப்புகள் யாரும் முன்வரவில்லை
என்பதால்தான்.
புதுச்சேரியில் மருத்துவர்
அரிமாமகிழ்கோ அவர்கள் அரசு மருத்துவமனை யில் பணியாற்றி வந்தவர். தமிழில் மருந்து
சீட்டு எழுதி நோயாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்காக வேலையிலிருந்து
நீக்கப்பட்டுள்ளார். அவருக்காக எந்த தமிழ் அமைப்புகளும் போராட முன்வரவில்லை.
இதையயல்லாம் அவர் காலத்தில்
பெரியார் செய்தார். மறைமலையடிகளுக்கு சிக்கல் என்றால் போரடினார். தமிழ்
புலவர்களுக்கு சமஸ்கிருத புலவர்களை விட ஊதியம் குறைவு என்றால் போராடி உரிமையையும்
பெற்றுக் கொடுத்தார். ஆனால் பெ.மணியரசன் இதெல்லாம் மொழிக்கொள்கையாகாது என்று
கூறுகிறார்.
அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான்
மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான் என்றார் பெரியார். உடனே
பெ.மணியரசன் துள்ளிக் குதிக்கிறார். ஆகா பெரியார் மாட்டிக் கொண்டார் என்று. உடனே
கேள்வி கேட்கிறார், ‘ உச்ச
நீதிமன்ற நீதிபதி பதவிதான் உயர்வின் எல்லையா? "
பெரியார் நன்றாகவே அடைமொழி
போடுகிறார், அதாவது
‘அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் ’ என்று. இவனே ஆங்கிலம் ஒன்றைமட்டுமே
படித்துவிட்டு வேறு எந்த தகுதியுமேயில்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறான்
என்றுதான் கூறுகிறார்.
தமிழறிஞர்களுக்காக பெரியார்
வருத்தப்படுகிறார், ‘தமிழ்
மொழிக் களஞ்சி யங்களான ‘மாணிக்க
வாசகர் காலம்’ எழுதிய
காலஞ்சென்ற மறைமலையடிகள், பெரியபுராணத்திற்கு
புதுஉரை எழுதிய திரு.வி.கலியாணசுந்தரம் முதலியோர் வாழ்வில், முக்கியத்துவத்தில் என்ன தரத்தில்
இருந்து சென்றார்கள்? "
பெரிய அளவில் வாழ்க்கைத்தரத்தில்
பெரும்வாழ்வு வாழவில்லை என்பது தானே பெரியாரின் கவலைக்கு காரணம். இங்கு காலம்
சென்ற அறிஞர்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்கள் ‘சைவத்தை நிலைநிறுத்திய
மூடநம்பிக்கைக் களஞ்சியங்களாகத்தானே முடிவெய்தினார்கள்’ என்று கவலைப்படுகிறார்.
காலஞ்சென்றவர்களைப் பற்றி
கவலைப்பட்ட பெரியார், இப்பொழுது
வாழ்கின்ற காலஞ்செல்லாத அறிஞர்களைப் பற்றியும் கவலைப்படுகிறார்,
‘காலம் செல்லாத இன்றையத் தமிழ்க்
களஞ்சியங்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர்கள் சிதம்பரநாதன் செட்டியார், மு. வரதராசனார், இராஜ மாணிக்கனார் மற்றும் ஒரு டஜன்
உருப்படிகளின் இன்றைய நிலை என்ன? அவர்களால் ஒரு அளவுக்கு நன்றாய் பிழைக்கிறார்கள் என்பதை தவிர
நாட்டிற்கோ மனித சமுதாயத்திற்கோ என்ன பயன்? அன்னக் காவடி பஞ்சாங்கப் பார்ப்பான்
மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான்’ என்று வேதனைப்படுகிறார்.
பெரிய அறிஞர்கள் டாக்டர்கள் எல்லாம்
சாதாரண வாழ்வே வாழ்கிறார்கள். அன்னக்காவடி பார்ப்பான் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதி
ஆகிறான் என்றுதானே பெரியார் கவலைப்படுகிறார். பெ.மணியரசனுக்கு இது புரியவில்லையா? இல்லை. புரிகிறது. அதனால்தான்
அடுத்து எழுதுகிறார் பெ.மணியரசன், ‘பெரியார் குறிப்பிடும் தமிழறிஞர்கள் அத்தனைபேரும் மிகச் சிறப்பாக
ஆங்கிலம் கற்ற ஆய்வாளர்கள். ஒருவர் ஆங்கிலம்-தமிழ் அகராதி எழுதிய அறிஞர்
குழுவுக்குத் தலைமை தாங்கியவர். இவர்கள் உயர் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்து
ஒளி வீசியவர்கள். இவர்களை ‘காலஞ்செல்லாத
தமிழ்க் களஞ்சியங்கள் ’ என்று
பெரியார் குறிப்பிடுவது நடப்புக்கு முரணான செய்தி. இவர்களைப் போன்ற ‘ ஒரு டஜன் உருப்படிகள்’என்று பெரியார் கூறுவது தமிழ்
அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப்பைத்தியங்கள் உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற
கருத்தாகும். பெரியாரின் இக்கணிப்பு தவறு ’.
இறுதியாக தமிழறிஞர்களுக்கு ஆதரவான
குரலையும் கவலையும் பெரியார் தெரிவிக்கிறார், ‘பார்ப்பனரல்லாத என்கின்ற உணர்ச்சிப்
போராட்டம் இல்லா திருந்தால் இந்த மேதாவி டாக்டர்கள் மகான்கள் நிலை இன்று எப்படி
இருக்கும்? கிறுக்கன்
பாரதிக்கு இருக்கிற மதிப்பில் நூற்றில் ஒன்று கூட இவர்களில் எவருக்குமே இன்று
இல்லை. இவர்கள் தரத்தைவிடக் குறைந்த தரமுள்ள, ஆங்கிலத்தில் பேர் பெற்றவர்கள், சாதாரண அளவு ஆங்கிலப் படிப்பாளிகள்
எவ்வளவு மேல் நிலையில் இருக்கிறார்கள் ’.(விடுதலை தலையங்கம் 5.4.1967)
பெரிய அறிஞர்கள் பொருளாதாரத்திலாவது
பெரும் வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டாமா? என்பதுதான் பெரியாரின் கவலை. மேலும்
‘
உருப்படிகள் ’ என்ற சொல்லையும் ‘காலஞ்செல்லாத’ என்ற சொல்லையும் ஒன்றாக இணைத்து
குழப்பி பெரியார் மீது குற்றஞ்சாட்டுகிறார் பெ.மணியரசன்.
மேலும் பெரியாரோடு இருந்ததால்தான்
சாமி.சிதம்பரனார், புலவர்
குழந்தை, பொன்னம்பலனார்
மற்றும் பாரதிதாசன் சமுதாய சிந்தனைகளில் ஈடுபட்டு செயல்பட முடிந்ததே தவிர
பெ.மணியரசன் கருதுவது போல் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் என்பதால் அல்ல.
மறைமலையடிகளைப் பற்றியும் திரு.வி.க
அவர்களைப் பற்றியும் குறிப்பிடும் போது பெரியார், ‘மரியாதைக்குரிய - பாராட்டத்தகுந்த
தமிழ்ப் பெரியார்கள் மறைமலை அடிகள் முதல் திரு.வி.க.வரை உள்ள பெரியார்களிடம்-
அவர்கள் கருத்துக்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறைகளில் இருந்து, இன்றைய நாட்டு முன்னேற்றத்திற்கு
என்றோ மக்கள் முன்னேற்றத்திற்கென்றோ எடுத்துக் கொள்ளதக்க சாதனங்கள் என்ன
இருக்கின்றன என்று அன்பர்கள் தோள் தட்டிக் கூறமுடியுமா? ’ (பெ.ஈ.வெ.ரா.சி. பக்.992) என்றுதான் குறிப்பிடுகிறார்.
மறைமலையடிகளைக் குறிப்பிடும்போதும் திரு.வி.க. அவர்களைக் குறிப்பிடும் போதும்
தமிழ்க் களஞ்சியங்கள் என்றுதான் கூறுகிறார்.
முற்றும்
- கவி
No comments:
Post a Comment