அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதைப் புண் படுத்தலாமா ?
எதையும் மனதைக் காயப்படுத்தி திணிக்க முடியாது. காயப்படுத்துவதும் கூடாது; ஆயின் காயப்படுத்துவது என்பதென்ன? உண்மையைச் சொல் வதும்; அறிவியலாய் கேள்வி எழுப்பு வதும் காயப்படுத்துவதாகுமா ? ஒரு காலத்தில் நரபலி மத நம்பிக்கையாக இருந்தது. அதை எதிர்த்து முறியடிக் காமல் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீண்டிருக்க முடியுமா? அன்று நர பலியை கேள்வி கேட்ட போது மத நம்பிக்கையில் தலையிடுவதாகத்தானே கூச்சல் போட்டார்கள்.
தங்கள் உள்ளம் காயப்பட்டிருப்பதாக கூறினார்கள். உடன்கட்டை ஏறுவது மத நம் பிக்கையாக இருந்தது; அதனை எதிர்த்தபோது மதவாதிகள் தங்கள் மதத்தில் தலையிடுவதாகக் கூச்சல் போட்டனர். ஆயினும் விடாது போரா டியதால்தானே அக்கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது. இன்னும் சதிமாதா கி ஜே என்போரை விமர்சனம் செய் வது எப்படிக் காயப்படுத்துவதாகும்? தேவதாசி முறை ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டம் எல்லாம் மனிதனை மேம்படுத்தவே! இது யாரையேனும் காயப்படுத்துவதாக இருப்பின் திருந்த வேண்டியவர்கள் அவர்களே தவிர வேறல்ல. உலகம் தட்டையல்ல உருண்டை; பூமியை சூரியன் சுற்றவில்லை சூரி யனைத்தான் பூமி சுற்றுகிறது ; உடலில் இரத்த ஓட்டம் உள்ளது; உடலில் எலும்புகள் இத்தனை; சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது, சூரியனின் பிரதி பலிப்பே; இப்படி எந்த அறிவியல் உண்மையைச் சொல்லும் போதும் அது மத நம்பிக்கைக்கு எதிராகவே இருந்தது; அதனால் பலர் தண்டிக்கப்பட்டனர். மத நம்பிக்கை காயப்படுகிறது என உலகம் இந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் விட்டிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் (சமூக வலைத் தளத்தில் உரையாடும் வசதி உட்பட) இல்லாமல் போயிருக்குமே!
மனித குல வளர்ச்சிக்கு முன்னேற் றத்துக்கு வளவாழ்வுக்கு எதிராக இருக்கும் தவறான பழக்க வழக்கங்களை அறிவியல் நோக்கில் சுட்டிக் காட்டுவது எப்படி காயப்படுத்துவதாகும்? மாறாக அறிவியலின் அனைத்து பலன்களையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல் ரீதியான கேள்விகளை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? ஆத்திகம் ஒரு சாரார் உரிமை எனில், நாத்திகம் இன் னொரு சாரார் உரிமை. இதை ஏற்க மறுப்பது ஏன்? இந்தியச் சிந்தனை மரபு முழுவதும் ஆத்திகருடையது என்பது விவரம் தெரியாதவர்கள் கூற்றே! இன்னும் சொல்லப் போனால் லோகாயவாதம் எனப்படுகிற பொருள்முதல்வாத மரபு வலிமையானது . தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய நூல்களில் இதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன . குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த இந்திய நாத்திகம் எனும் நூல் உரக்கப் பேசும். உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகளையும் கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் சாடிச்சாடி கேள்வி கேட்டு கேள்வி கேட்டு பெறப் பட்ட முன்னேற்றம்தான் ; நாத்திகரும் ஆத்திகரும் - அனைவரும் அனுபவிக் கும் அனைத்துமாகும். இந்திய தத்துவ மரபில் விவாதம் முக்கியமானது . அதில் சாமான்ய சள என்றொரு வகை உண்டு . அதனை தத்துவஞானிகள் ஏற்பதில்லை.
ஏனெனில் சாமன்ய சள என்பது விவாதத்தின் மையத்தை விட்டுவிட்டு குதர்க்கமாக குறுக்குசால் ஓட்டுவதாகும். இந்த குயுக்தியை அவர்கள் நிராகரிப்பர். மேலே கேட்ட கேள்விகள் அத்தகைய சாமான்ய சளதான். ஆயினும் குழப்பம் நீக்கிட பதில் சொல்லவேண்டியது கட் டாயமாகிவிட்ட்து. எல்லா விமர் சனங்களுக்கும் முதன்மையானது மதங்களைப் பற்றிய விமர்சனமே என்பது மார்க்சிஸ்ட்கள் உறுதியான முடிபு; அதே நேரம் மார்க்சிய விமர்சனம் வசைபாடுவதோ அவதூறு பொழிவதோ அல்ல, சமூக அறிவியல் நோக்கில் பகுத்தாய்வதே ஆகும். அதனைத் தொடர்ந்து செய்வோம். யாரையும் காயப்படுத்த அல்ல; விழிப் புணர்வுக்காக சமூக சமத்துவத்துக்காக சமூக நீதிக்காக சமூக முன்னேற்றத் துக்காக.
- சு.பொ.அகத்தியலிங்கம்
(நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் 14.09.2014)
No comments:
Post a Comment