தந்தை பெரியார் அவர்களைப்பற்றி தமிழ்
அறிஞர்கள் கூறுகிறார்கள்!
மறைமலைஅடிகள்:
ஜாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும்
என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க்
கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து
ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும்
காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற்
கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.
பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி
அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும்
எழுதவும், துவங்கிய
காலந்தொட்டு, ஆரிய
சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த
குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்
தவிர்வராயினர்.
தேவநேயப்
பாவாணர்:
எல்லா துறைகளிலும், பிராமணியத்தை வெளிப்படை யாகவும்
உண்மையாகவும் எதிர்த்து, தமிழரைத்
தன்மானமும், பகுத்தறிவும்
உள்ள மக்களாக வாழவைத்த செயல் ஏனைய எவரும் செயற்கரிய செயலாதலின் பெரியார் உண்மையில்
பெரியாரே!
இலக்குவனார்:
பெரியார் தலைமையில் நமது நாடு, திராவிட நல்திருநாடு விடுதலை பெற்று
உலக அரங்கில் உயர் பெருமை அடைவது உறுதி.
நாவலர்
சோமசுந்தர பாரதியார்:
பெரியார் ராமசாமி அவர்கள்
திராவிடருக்குப் பொதுவாகவும், தமிழருக்குச் சிறப்பாகவும் உரிமையும் பெருமையும் உண்டுபண்ண
உழைக்கும் பெருந்தலைவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார்
வரிசையில் சேராதவர். தமிழர் உரிமைக்கும், தமிழக நன்மைக்கும் ஓயாது உழைத்து, மாற்றார் யாரோடும் அஞ்சாமல் ஆற்றும்
போராட்டத்தைப் பாராட்டாத தமிழரிரார் என்பதே என் கருத்து.
வ.
ரா:
செய்யவேண்டும் என்று தோன்றியதைத்
தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப்போல தமிழ்நாட்டில் வேறு யாரிடமும்
காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு நாயக்கர் அவர்கள்
முன்னோடும் பிள்ளை! தூதுவன்!
கல்கி:
உலக அனுபவம் எனும் கலாசாலையை
முற்றும் உணர்ந்த பேராசிரியர்!
டாக்டர்
மா.இராசமாணிக்கனார்:
தமிழுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் முன்னடியராக
நின்று அவ்வின்னலை நீக்குதல் பெரியாரது இயல்பு. 1936 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
மூலம் தமிழ் வாழ்க! என்ற முழக்கம் தமிழ்நாடு முழுதும் முழங்கச்செய்த பெருமை
பெரியாருக்கே உரியது.
கா.அப்பாதுரையார்:
தமிழர் உண்மையிலேயே தமிழராய், தனித்தமிழராய் உலகில் பிறருடன்
ஒப்புரிமைகொள்ளத் துணிவர். தன்னாட்சி புரிவர். அறிவாட்சியில், அன்புக் கலையாட்சியில் முனைவர்
என்பதற்கு அவர் வாழ்க்கையின் வெற்றி ஓர் அரிய வழிகாட்டியும், நற்குறியுமாகும்.
கி.ஆ.பெ.விசுவநாதன்:
தமிழர் இயக்கத்தின் தந்தையும், பகுத்தறிவு இயக்கத்தின் தலைவருமாகிய
ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை நன்கு கவனித்துப் பார்த்தால்
வள்ளுவர் வாக்கைப் பின்பற்றி தமிழ்நாட்டில் நடந்து காட்டும் பெரியார் ஈ.வெ.ரா
ஒருவரே என்பது இனிது புலனாகும். பெரியார் அவர்கள் குறளைப் படித்தவர்கள் என்று
கூறுவது மட்டுமல்ல, நன்கு
ஆராய்ச்சி செய்தவர்கள் என்றும் என்னால் கூற இயலும்.
புலவர்
குழந்தை:
பெரியார் பிறவாதிருப்பரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ் நாகரிகம் என்னும் உணர்ச்சி
யெல்லாம் தமிழ் மக்களுக்குத் தோன்றியிரா. தமிழ் வாழ்க எனும் நெஞ்சத் துணிவு
ஒருகாலும் உருவாகியிருக்காது. தமிழ் முதன்மொழி ஆனதற்கு மாறாக தன் பெயரை
இழந்திருக்கும். தமிழ்ப் பண்பாட்டை ஆரியப் பண்பாடு விழுங்கி ஏப்பம்
விட்டிருக்கும்.
திருக்குறள்
வீ.முனுசாமி:
பெரியாரின் நுண்ணிய வாழ்க்கையினைத்
துருவிக் காணுவோருக்கு வள்ளுவர் கூறும் வழியினிற் செல்வோர் இவர் ஒருவரே என்பது
வெள்ளிடை மலையென வெளிப்படும்.
* * *
No comments:
Post a Comment