Saturday, 4 October 2014

கோயிலில் யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ?



உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயிலில் யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன? எந்த மொழியில அர்ச்சனை செய்தா உங்களுக் கென்ன? கோவில் நுழைவுப் போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

இது மதநம்பிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல . மனித உரிமை சார்ந்த பிரச்சனை . சமத்துவம் சார்ந்த பிரச்சனை. நாம் அவர்களைப் பார்த்து கேட்க ஆசைப்படும் கேள்வி இதுவே , கடவுளை நீயும் நம்புகிறாய் ; அவனும் நம்புகிறான் . அப்படியிருக்க உனக்கு மட்டுமே பூஜை செய்ய உரிமையும் பாத்தியதையும் உண்டு அவனுக்கு இல்லை என்பது என்ன நியாயம்? கடவுள் எல்லொருக்கும் பொது என்பது பொய்யா? ஒரு சாராருக்கு மட்டுமே உரியவரென்றால் அவர் எப்படிக் கடவுளாவார் ? உமது நம்பிக்கைப்படி கடவுள்தாம் உலகத்தைப் படைத்தார் எனில் அவர் ஒரு சாராரை மட்டும் படைத்தாரா எல் லோரையும் படைத்தாரா? கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியுமா?


உண்மையில் நாத்திகரைவிட கடவுளை அதிகம் கேவலப்படுத்துகிறவர் யார்? இப்படி பிறர் உரிமையை
மறுப்பவரல்லவா? உங்களுக்கேன் அக்கறை என முற்போக்காளரை நோக்கி கேட்பவரே, உரிமை எல்லோருக்குமானது . அதனை ஒருசாராருக்கு மறுக்கும் போது எதிர்த்துக் கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .அடுத்தவீட்டுக்காரன் மனைவியை தூக்கிப் போட்டு அடிக்கும் போதோ மிதிக்கும் போதோ தலையிட்டுக் கேட்பதில்லையா? எரிவது என் வீடல்ல என சும்மா இருப்பது அறமா?

உரிமை மிதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பது சமூகநியாயமே!

- சு.பொ.அகத்தியலிங்கம்
(நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் 14.09.2014)

No comments:

Post a Comment